வாழ்வின் பேரிழப்பு ஒன்றின் போது கூட கிரிக்கெட் ஆர்வத்தைக் துறக்க முடியா ஈர்ப்பு கொண்ட, காவிரி வள குளித்தலை பகுதியின் பெரும் விவசாயி முருகேசனின் கிரிக்கெட் பேரார்வம் அவரது மகள் கௌசல்யாவிற்கு கடத்தப்பட்டு, இந்திய நாட்டிற்காக விளையாடி வெற்றி வாங்கித் தரவேண்டும் என்ற ‘கனா’வாக மாறினால்? தேசத்தின் ஒரு மூளையில் இருக்கும் குளித்தலையிலிருந்து எதுவும் தெரியா ஒரு சிறுபெண் கனவு கொண்டால் போதுமா? அவள் எழுந்து வருவதற்குள் உள்ளூரில், மாநில அளவில், தேசிய அளவில் எழும் பிரச்சினைகளை சமாளித்து அவளால் உயரே வர முடியுமா? இவற்றை சுவராசியமாக திரைக்கதைப் பண்ணி தந்திருக்கிறார்கள் ‘கனா’வாக.
தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் சிவகார்த்திகேயனின் ‘கனா’ நிறைவேறிவிட்டது, இயக்குனர் அருண்ராஜா காமராஜின் படைப்பால்.
சத்யராஜ் நாயகனாக அருமையாக செய்திருக்கிறார். அட… அவரது மனைவியாக வருவது பழைய ‘என் உயிர்த் தோழன்’ ரமாவாம்! இளவரசு, ஒருதலை காதல் கொள்ளும் ட்ரவல்ஸ் நிறுவன இளைஞராக வருபவர், கூட நிற்கும் சச்சின், டெண்டுல்கர் என எல்லோரும் நன்றாக செய்துள்ளனர்.
ஐஸ்வர்யா ராஜேஷ் அருமையாக செய்துள்ளார், துருத்திக் கொண்டு வெளியே நிற்காமல் பாத்திரத்திற்குள் நின்று வேண்டியதை தந்துள்ளார்.
‘மனி பால்’ திரைப்படத்தில் பிராட் பிட் செய்ததைப் போன்ற ‘கோச்’ பாத்திரத்தில் வரும் சிவகார்த்திகேயன் சிறப்பாக செய்திருக்கிறார்.
விளையாட்டு – தன்னம்பிக்கை – உற்சாகப் படம் என்ற களத்தில் என்ன மாதிரி உணர்ச்சிகள் ஏற்ற வேண்டும் என்று உணர்ந்து, அதற்கான சங்கதிகள் வசனங்கள் தொடுத்து செய்திருக்கிறார்கள். ‘ஆசப்பட்டா மட்டும் போதாது, அடம் பிடிக்கத் தெரியனும்’ ‘ஜெயிச்சவங்க சொன்னா கேப்பாங்க!’ ‘உன்னால முடியாதுன்னு யாரவது சொன்னா, நீ நம்ப வேண்டியது அவங்கள இல்ல, உன்னை!’ என்பவை அதற்கான உதாரண நச் வசனங்கள்.
முழுப்படமும் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ச்சி ஏற்றப்பட்டு கடைசி இருபது நிமிடத்தில் உச்ச உணர்ச்சியை தரவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார் போல இயக்குனர். எல்லோர் முன்னிலும் விளக்கமாறு கொண்டு அடிப்பது, ‘பால் ஆடி ஆடி வருதா, எந்த பாலை பாக்கறதுன்னு தெரியல!’ காட்சியும், அதைத் தொடர்ந்து நடந்தேறும் காட்சிகள், விவசாயிகள் தற்கொலை, வீடு ஜப்தி என்று அடுக்கடுக்காய் நகர்வது நன்றுதான் என்றாலும், அந்த வங்கி மேலாளர் விவசாயி முருகேசனிடம் நடந்து கொள்வது கொஞ்சம் ‘ஓவர்’ சினிமாத்தனமாக இருக்கிறது. இந்திய கிரிக்கெட் பயிற்சி கழகத்திற்குள்ளே நடப்பதை எப்படி வெளியிலிருந்து அப்பாவும் மாமாவும் பார்க்கமுடியும் என்பது போன்ற லாஜிக் மீறல்கள் இருக்கவே செய்கின்றன (இதே சங்கதியை ‘டங்கல்’ படத்தில் அமீர்கானுக்கு வேறு மாதிரி செய்திருப்பார்கள்! இயக்குனர் கவனித்திருக்கலாம்)
இரண்டு பாடல்கள் நன்றாக இருக்கின்றன.
ஆஸ்திரேலிய அமாண்டா, வடஇந்திய தீபிகா, மைதானம் என்று நகரும் கடைசி இருபது நிமிடம் நன்று. ஒளிப்பதிவும் சிறப்பு.
வீ டாக்கீஸ் வெர்டிக்ட் : ‘கனா’ – சிவகார்த்திகேயனின் கனவு மெய்ப்பட்டிருகிறது. பார்க்கலாம்.
– திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து
