தமிழ்நாட்டைப் பொறுத்த வரை நம் மாநிலத்திற்கு மேல் இருப்பவரெல்லாம் வட இந்தியர்களே. கிழக்கின் சிக்கிமிஸ் கூட வடக்கர்களே நமக்கு. ஒரு வகையில் நமது இருப்பைப் பொறுத்து அது உண்மைதானென்றாலும், பொது வழக்கில் இருப்பது வேறு.உண்மையான வடக்கர்களை இன்று காலை உணவகத்தில் பார்த்தேன். இட்லி, தோசை, உப்புமாவிற்குப் பறக்கிறார்கள். ‘சாம்பர்… சாம்பர்..’ என்று சாம்பாருக்கு உற்சாகமடைகிறார்கள். (உற்சாகம் இல்லாமல் இருப்பதாக ஜெமினிகணேசனையும், ராமராஜனையும் சாம்பார் என்றழைத்தோம் நாம்!)போகும் ஊரில் அந்த ஊரின் உணவை உண்பவன் நான் என்றாலும், எப்படி செய்திருக்கிறார்கள் இவர்கள் என்று பார்க்கலாமேயென, சில துண்டுகள் சுவை பார்த்தேன். ‘உவ்வே!’ உளுந்தே இல்லாத புளித்துப் போன மாவில் இருந்த இட்லி வாயில் வைத்தால் என்னவோ போலிருந்தது. ‘சொஜ்ஜி உப்மா’ என்ற பெயரில் தரப்பட்ட உப்புமா நீர் பிரிந்து காயும் வரை கிளரப்படாமல் பதம் வருவதற்கு முன்னரே இறக்கப்பட்டிருந்தது. சுருட்டி தரப்பட்ட தோசையின் பக்கம் நான் செல்லவேயில்லை.’இதுதான் இட்லி போல, இதுதான் உப்புமா, இதுதான் சாம்பார்!’ என்று நம்பி உண்ணும் வடக்கர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. இந்த உணவுகளின் அசல் சுவை தெரியாமலே போகலாம் அவர்களுக்கு. ‘இப்படித்தான் சைனீஸ் நூடுல்ஸை தின்கிறோமா நாம் சென்னையிலும் தமிழ்நாட்டிலும்!?’ என்ற கேள்வி வரவே செய்கிறது.சிக்கிமைப் பொறுத்தவரை இவர்கள் அடிப்படையில் அரிசி உணவைக் கொள்பவர்கள் என்றாலும் திபெத்தியர்களின் உணவே இவர்களது உணவாக கோலோச்சுகிறது இன்று, இத்தாலிய பீட்ஸா அமெரிக்காவில் கோலோச்சுவதைப் போல. சந்துக்குச் சந்து சிறுகடைகளில் ‘மோமோஸ்’ என வழக்கில் சொல்லப்படும் ‘டம்பிளிங்க்ஸ்’ கிடைக்கிறது. அட்டகாசமான நூடுல்ஸ் கிடைக்கிறது.நாற்பது ரூபாய்க்கு ஒரு தட்டு் நிறைய வைத்து எட்டு மோமோஸ் தருகிறார்கள். ‘எட்டு மோமோஸ் வெறும் நாப்பது ரூவாய்தானா! ஒண்ணு தரமில்லாததது இல்லன்னா இவங்களுக்குப் பொழைக்கத் தெரியல!’ என்ற எண்ணத்துடன் வாங்கி உண்டால் அசந்து போவீர்கள். நல்ல தரமான மோமோஸ் சுடச்சுட.மோமோஸ் எனப்படும் ‘டம்ப்ளிங்க்ஸ்’, ‘துக்பா’ ஆகிய நேபாளத்து உணவுகள் சிக்கிமின் உணவுகளாக மாறிவிட்டன. ‘துக்பா’ என்பது சீன ஜப்பானிய உணவகத்தில் கிடைக்கும் ‘வாய் வாய்’ போன்ற சுருள் நூடுல்ஸும் காய்கறிகள் அல்லது ஊன் துண்டுகள் கலந்த குழம்பின் கலவை (நூடுல்ஸ் சூப்!).இன்று காலை உணவகத்தில் ‘வை வை’ என்ற பெயரைப் பார்த்து விட்டு அள்ளிக் போட்டுக்கொண்டு சாப்பிட உட்கார்ந்த என்னைப் பார்த்து ‘அப்பா… அது நான் வெஜ்!’ என்று கூவினார்கள் என் மகள்கள். ஆமாம், நூடுல்ஸ் சூப் என்பது பெரும்பாலும் அசைவமாகவே உள்ளது இங்கே.
உருளைக் கிழங்கு மாவை சுவைபடச் செய்து ஒரு படிமமாக உள்ளே வைத்து சமைக்கப்பட்ட ‘ஆலு பராத்தா’ அட்டகாசமாகக் கிடைக்கிறது. ‘காலங்காத்தால இத சாப்டுட்டு தொம்முன்னு இருக்க முடியாதுப்பா. அதுவும் தயிரு தொட்டு!’ என்று நீங்கள் நினைக்கலாம். இது காலை உணவாக இங்கே கிடைக்கிறது வடக்கர்களுக்காக. தயிரும் ஊறுகாயும் வைத்து வெளுக்கிறார்கள். தயிர் தொட்டுத் தின்று விட்டு காப்பியையும் குடிக்கிறார்கள். கால் பங்கு ஆலு பராத்தாவும் பூரியும் கடலைக்கறியும் போதும் நம் போன்ற சிலருக்கு. அதற்கப்புறம் தேநீர் மிகச் சிறந்த சுவையில் கிடைக்கிறது.இலங்கைக்குப் போனால் ‘கட்ட சம்பல்’, வட கர்நாடகா போனால் ‘ராகி மொத்தா’,பூனா போனால் ‘மிசல் பாவ்’, அசல் ராஜஸ்தானி மார்வாரி மக்கள் வீட்டிற்குப் போனால் ‘ச்சோர்மா’ ‘தால் ப்பாட்டி’, சிக்கிம் வந்தால் மோமோஸ் நூடுல்ஸ் என்று அந்தந்த மண்ணின் உணவை கொள்பவன் அம்மண்ணின் அசல் உணவை அதன் அசல் சுவையில் தன்மையில் பெற்று அதிக அனுபவங்களைப் பெறுகிறான், ‘சுருக்’கென்று நாக்கில் படும் பொள்ளாச்சி இளநீரை பறித்தவுடன் பொள்ளாச்சியில் குடிப்பதைப் போல.#Gangtok
#Sikkim
#ParamanInSikkim- பரமன் பச்சைமுத்து
கேங்டாக், சிக்கிம்
01.06.2019