
ஆந்திர துவரம் பருப்பை அரைத்து கலக்கப்பட்ட மாவை, நல்ல சூடான கல்லில் மெலிதாக வார்த்து, பதத்திற்கு வரும் போது அதில் ஏசியன் பெயிண்ட்ஸ் வெளிப்பூச்சு போல பச்சை வண்ண சட்னியொன்றை பூசி, சில நிமிடங்கள் காய்ந்ததும், அதன் மீது அப்படியே உப்புமாவை கொட்டி (ஆமாம்பா… ஆமாம், உப்புமாதான்! ஆவ்வ்வ்வ்…) அள்ளியடித்த சிமெண்ட் கலவையை கொற்றர் கரணையால் சமன்படுத்துவது போல தோசைத் திலிப்பியைக் கொண்டு விரவி சமன்படுத்தி காத்திருந்து, பதம் வந்ததும் தோசைத் திலிப்பியை எண்ணெய்யில் விட்டெடுத்து கல்லிலிருந்து வார்க்கப்பட்ட தோசையை பெயர்த்து அப்படியே சுருட்டி தட்டில் வைத்தால்… ஆந்திர ஸ்பெஷல் ‘உப்புமா பெஸெரெட்டு’.
தேங்காய் சட்னியில் பச்சைமிளகாயை கூடுதலாக சேர்த்து அரைத்து வைத்திருக்கிறார்கள் என்றாலும் பெஸெரெட்டின் சிறந்த சேர்க்கை இஞ்சியை அடித்து சிறிது வெல்லம் சேர்த்து செய்யப்படும் ‘அல்லம் பச்சடி’தான் என்கிறார்கள்.
விசாகப்பட்டினத்தில் இறங்கி, மகேஷ் பாபு படங்களை அசை போட்டபடி தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கையில், அப்படியே போய்விட்டால் எப்படி? லங்கெலபாளையம் என்ற ஊரில் இறங்கி ஒரு சிறு உணவுக் கடையில் ஆந்திர உணவை ருசித்தேன்.
ஆ… காரம்!
வேற ஊர் வேறு மொழி வேறு மாகானம் வேறு வகை உணவு என்று முயற்சித்தாலும்… ‘மவனே, இங்கயும் வரண்டா!’ என்று வந்து நிற்கிறது அதே உப்புமா வேறு வடிவில்!
- பரமன் பச்சைமுத்து
விசாகப்பட்டினம்
03.01.2021