கபாலியை வணங்கி விட்டு ஐயர் தந்த சாமந்தியையும் வில்வத்தையும் கையில் வைத்துக்கொண்டு உள்பிரகாரத்தை சுற்றி வர நடக்கிறேன்.
‘பெருமிழலைக் குரும்ப நாயன்மார்’ சிலையை இன்னைக்கு பாத்துடனும்!’ என்ற நினைப்புடனே நடக்கிறேன்.
திருநீலகண்டர் தொடங்கி வரிசையாய் அறுபத்து மூவரும் இருக்குமிடத்தில் ஒரு மனிதர் நிற்கிறார். சுவரில் இருக்கும் நாயனார்கள் சிலைகளுக்கும் அவருக்கும் இடையில் வெண்கல வண்ண ஸ்டீல் தடுப்பு கம்பிகள்.
நாயன்மாரின் பெயரை படித்து விட்டு, தேர்வு செய்தவர் போல, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு கம்பிக்கு மேலாக எதையோ செய்ய முயல்கிறார். மூப்போ பிணியோ உடல் ஒத்துழைக்க வில்லை. அவரைக் கவனித்துக் கொண்டே பெருமிழலைக் குரும்பரை தவற விட்டவன், அவரைக் கடந்து போகும் நிலையில் திரும்ப வருகிறேன்.
‘என்ன வேணும்’
அவர் கையில் நேர்த்தியாய் நெருக்கி நெருக்கிக் கட்டப்பட்ட இளஞ்சிவப்பு அரளிப்பூ மாலை இரண்டு முழம்.
‘இதை இவரு மேல போடனும்னு பாக்கறேன், முடியல!’
‘நான் போடட்டுமா!’
‘நல்லா போடுங்க. அவருக்கு மாலை சாத்தனும் அவ்ளோதான்!’
அவர் சுட்டிய அந்த சிலையை நோக்கி எக்கி எம்பி அரளிமாலையை போட்டேன். அழகாக அவரது கழுத்தில் அமர்ந்தது.
அவர் சிலையைப் பார்த்தபடி கைகுவித்து நிற்க, சிலையின் கீழுள்ள பெயரைப் படித்துக் கொண்டே நகர்கிறேன்.
‘கண்ணப்ப நாயன்மார்’
‘காளத்தியப்பன், குடுமித்தேவர், சிவகோசாரியார், காட்டுப்பன்றி, அர்ஜூனன், விற்போர், தின்னன், சொர்ணமுகி ஆறு, வாரியார் சுவாமிகள், பெரிய புராணம், அந்நாட்களில் அடிக்கடி டிவிஎஸ் மேக்ஸ்100ஆர்ரில் பயணித்துப் போனது…’ எல்லாம் வந்து போயின மனதில்.
‘பெருமிழலைக் குரும்பரைப் பார்க்கப் போய் கண்ணப்ப நாயன்மாருக்கு பூ மாலை போட்டவன்டா!’ என்ற படி கொடி மரத்தை நோக்கி நடக்கிறேன்.
மலர்ச்சி-தினம்
- பரமன் பச்சைமுத்து
22.01.2021