
சன் டிவி வானிலை மோனிகாவிடமிருந்து அழைப்பு.
‘இந்த நிகழ்ச்சிக்கு நீங்க வரணும் பரமன்!’
……….
சுஜாதா குமுதம் ஆசிரியராக இயங்கிய காலம் நிறைய வாசகர்களுக்கு பொற்காலம் என்பது போல் எனக்கும். அப்போது வெளியாகியிருந்த ‘இருவர்’ படத்திற்கு அவர் பெயரிலேயே அவர் எழுதியிருந்த சிறப்பு விமர்சனத்தை 20 முறையாவது படித்திருப்பேன்.
எழுத்தாளன் என்பதை விட சினிமா விமர்சகன் என்ற அடையாளம் கொள்ள ஆசை கொண்ட நேரங்கள் அவை. பெங்களூரில் இருந்ததால் தமிழ், ஆங்கிலம் தாண்டி இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு என கண்ட படங்களையும்…. பார்த்து எழுதினேன், எழுதுவதற்காகப் பார்த்தேன்.
ஐடி துறை வாழ்க்கை, மைக்ரோலேண்ட் சென்னை, அல்மா மாட்டர் வாழ்க்கை என மாறினாலும் தொடர்ந்ததற்கு ‘மணக்குடியான் டாட் காம்’ என்று என்னிடமிருந்த இணைய தளமும் ஒரு காரணம். ‘பரமன் ரிவ்யூ படிச்சிட்டு படம் பாக்கறத முடிவு பண்ணுவேன்!’ என்று மின்னஞ்சல் அனுப்பி கோவை பூபதியும், சிங்கப்பூர் பாலாஜியும் சொல்லி அதிர வைத்ததும் நடந்தன அந்நாட்களில்.
நான் வளர்ந்தேனா தெரியவில்லை, ஆனால் என் விமர்சன பார்வை மாறியது. திரைவிமர்சனம் தொடர்ந்தது. ‘அழகிய தமிழ் மகன்’ படத்திற்கு எழுதிய விமர்சனம் என்னையும் மாற்றியது (அப்போது ஆங்கிலத்தில் தத்துபித்தென்று எழுதி வைப்பேன்)
படங்கள் பார்த்தால் எழுதுவது மட்டும் தொடர்ந்தது. ParamanIn.comல் தொடர்ந்ததை, வளர்ச்சி இதழ் ‘வி டாக்கீஸ்’ ஆக எடுத்துக் கொண்டது.
இலங்கையின் பெரிய நாளிதழான ‘வீரகேசரி’, ‘நடிகையர் திலகம்’ படத்திற்கு நாம் எழுதிய விமர்சனத்தை அப்படியே நம் பெயரிலேயே வெளியிட்டு உவகை கூட்டியது.
தினமலர் என்னை வாரியணைத்துக் கொள்ள ‘அயல் சினிமா’ என்ற தலைப்பில் நாம் எழுதிய பிற மொழிப் படங்களின் விமர்சனம் வரத் தொடங்கியது.
பொது நிகழ்ச்சியொன்றில் பேசப் போகையில்,
‘சார், நான் இந்தப் படம் பாத்துட்டேன்! இந்தப் படத்துக்கு பரமன் எப்படி எழுதறார்னு படிக்க வெயிட் பண்றேன் சார்!’ என்று கைகுலுக்கி குபீர் கிளப்பினார் முன் பின் தெரியாத நபர் ஒருவர். (ஃபேஸ்புக் வட்டம்!)
அஜீத் படம் ஒன்றிற்கு எழுதியதில் பொதுவெளியில் சிரமம் ஒன்று வந்தது. விஜய் பட விமர்சனம் ஒன்றை என் பதிவிலிருந்தே தூக்க வேண்டியதும் நேர்ந்தது.
‘பரமன் எழுதியிருக்காரு. அப்பன்னா அதை பார்த்தே ஆகனும்!’ என்று மலரவர்கள் பேசுவது காதில் பட ஏற்கனவே கொண்டிருந்த பொறுப்பின் அடர்த்தி கூடியது.
ராமுவுக்கும், முகுந்தனுக்கும், செந்திலுக்கும், மைக்ரோலேண்ட் நண்பர்களுக்கும் காட்ட என தொடங்கியது என் விமர்சனம் எழுதல். சாமுவேல் மாத்யூ, பூர்ணிமா, ராம்ஜீ என வட்டம் விரிந்தது மெள்ள மெள்ள. இன்று திரும்பிப் பார்ப்பதே அனுபவமாக இருக்கிறது.
…..
சன் டிவி வானிலை மோனிகாவிடமிருந்து அழைப்பு.
‘இந்த நிகழ்ச்சிக்கு நீங்க வரணும் பரமன்!’
‘இதில் நான் என்ன பண்ணப் போறேன். நான் கிளாஸ் எடுகலகறவன். வேண்டாமே!’
‘நானும் கேட்டேன். ‘பரமன் ஒரு சூப்பர் விமர்சகர். அட்டகாசமா ரிவ்யூ பண்ணுவார். நச்சுன்னு இருக்கும். பரமன இன்வைட் பண்ணு!”ன்னு ப்ரொட்யூஸர் சொன்னாரு. அதான் இன்வைட் பண்றேன். டேட் டைம் லொகேஷன் இப்ப அனுப்பறேன்.
…….
ஒரு வட்டத்துக்குள் மட்டுமே எழுதிக் கொண்டிருந்தவனை, ஒரு தொலைக்காட்சி சேனலும், தயாரிப்பாளரும் கலைஞர்களும் ‘திரை விமர்சகனாக’ ஏற்றுக் கொண்டுள்ளனர்.
ம…கி…ழ்…ச்…சி !
- பரமன் பச்சைமுத்து
சென்னை
31.01.2021