




தைமாசம் பொறந்ததுமே
தைதைன்னு குதிக்கும் ஆத்தா
வயலெல்லாம் வெளஞ்சி நிக்கும்
ஆத்தா மனசெல்லாம் நெறஞ்சி நிக்கும்
தகதகன்னு தங்கமா
தலை சாய்ஞ்சி நிக்கும் கதிரு
ஆளுங்கள கூட்டியாந்து
அறுப்ப ஆரம்பிக்கும்
மானத்த காக்கும் சேலையையெடுத்து சொருவும்
வானத்த பாக்கும் கையெடுத்து கும்புடும்
அறுவாள எடுத்துகிட்டு
ஆத்தா வயலில் இறங்கும்
‘சளக் புளக்’ சேத்துல காலு
‘சரக் சரக்’ கதிருல அறுவாளு
மொத கதிரு முருகன்சாமிக்கு
ரெண்டாங் கதிரு சிட்டுக்குருவிக்கு
மீதியெல்லாம் கட்டடிக்க களத்துமேட்டுக்கு
சோறாக்க விக்க வெதைக்க பிற்பாட்டுக்கு
வக்கைப் பிரியில வாசல் எதிரில
வட்டமா திரிச்சி கட்டிவுடும் சிரிச்சி
எங்கிருந்தோ வரும் ஒரு குருவி
நோட்டம்வுடும் திரும்பி திரும்பி
நெல்லைக் கொத்திப் பாக்கும்
சுத்தி சுத்திப் பறக்கும்
சோடிக்குருவிய கூட்டாரும் இங்க
நெல்லை கொத்திக் கொத்தித் திங்க
வருஷம் உருண்டோடி போச்சி
வடநாட்டு மெஷின் வயல்ல வந்தாச்சி
குருவிக்கு கை அறுப்பு
மத்ததுக்கெல்லாம் மெஷின்தான் (அ)ப்பு
வடக்குவெளி வயல் கதிர
வாசலில் கட்டி வச்சோம் எதிர
வரட்டும் சிட்டு இங்க
நெல்லைக் கொத்தித் திங்க!
Manakkudi
Harvest
Birds
SittuKuruvi
PaddyForBirds
- பரமன் பச்சைமுத்து
02.02.2021
Facebook.com/ParamanPage