
‘இந்தியாவின் எரிசக்தி இறக்குமதியைக் குறைப்பதில் முந்தைய அரசு கவனம் செலுத்தத் தவறியதே பெட்ரோல் விலை உயர்வால் நடுத்தர மக்கள் இப்போது பாதிக்கப்படுவதற்குக் காரணம்’ என்று குற்றம் சாட்டியுள்ளார் பிரதமர் மோடி.
சென்ற முறை ஆட்சிக்கு வந்த போது சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. ஆறு ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருந்து விட்டு, அதற்கும் முந்தைய ஆட்சியை இப்போது இழுத்து பெட்ரோல் உயர்வுக்குக் காரணம் சொல்வது நியாயமாக இல்லை.
2014 மே 16ல் பிரதமர் மோடியின் தலைமையில் ஆட்சி அமைந்த போது சர்வதேச கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 106 டாலர்களாம். அப்போது பெட்ரோலின் விலை ரூ 71.41 ஆக இருந்தது. இப்போது சர்வதேச கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 59 டாலர். பெட்ரோலின் விலை பாதியாகக் குறைந்திருக்க வேண்டும், ஆனால் ரூ 100ஐத் தொட்டும் கடந்தும் நிற்கிறது.
சுப்ரமணியசாமி பெட்ரோல் விலை பற்றி ஏதோ சொல்கிறார் என்பதையே விட்டு விட்டாலும், சீனாவில் ரூ 51.06, அமெரிக்காவில் ரூ. 45.06, பிரேசிலில் ரூ 61.77 என்று ஊடகங்கள் இடும் பட்டியலை விட்டுவிட முடியவில்லையே. ‘இவ்வளவு வரியா வசூலிக்க வேண்டும்?!’ என்ற சாமானியக் குரல் எழுகிறது உள்ளே.
பெட்ரோல் டீசல் விலை உயர்வென்பது வெறும் எரிபொருளோடு நின்று விடாது. காய்கறி, பருப்பு, சாலைப் பயணம், ஆட்டோ கட்டணம் என மொத்த விலைவாசியையும் உயர்த்திவிடும்.
ஆண்டுகள் ஆன பின்னும் அடுத்தவரையே இன்னும் குறை சொல்வது ஆட்சியாளருக்கு அழகல்ல.
ம்ம்ம்ம்…
– மணக்குடி மண்டு
18.02.2021