வீடென்பது வெறும் கட்டிடமல்ல. உண்மையில் வீடு என்பது நான்கு சுவர்களுக்கும் தரைக்கும் தளத்திற்கும் இடையிலிருக்கும் வெற்றிட வெளி.
ஒன்றுமில்லாத அந்த வெற்றிட வெளி, சிறிதும் பெரிதுமாய் நாம் வாங்கி நிரப்பும் திடப் பொருள்களைத் தாண்டி, அங்கே வாழும் வாழ்ந்த கணங்களாலேயே நிரப்பப்படுகிறது.
கல்வி கற்ற தருணங்கள், பணியில் சேர்ந்த பொழுதுகள், புதிய முயற்சிகள் செய்த காலங்கள், வளர்ச்சி உயர்வு பெற்ற கணங்கள், இன்ப துன்ப நேரங்கள், உறவாடிய, மகிழ்ந்து குலாவிய, வெடித்து அழுத என வாழ்வின் கணங்கள் அந்த வெற்றிட வெளியில் நிரப்பப் படுகின்றன.
எங்கெல்லாமோ ஓடினாலும் எவ்வளவு தூரம் பயணித்தாலும், திரும்ப வந்து வாழுமிடத்திற்கு ‘உறைவிடம்’ என முதல் சொல் கொடுத்தவனுக்கு தலையில் மலர்க்கிரீடம் சூட்ட வேண்டும்.
மனிதர்களைப் போலவேதான் வீடுகளும், தொடக்கத்தில் தயக்கமிருந்தாலும் பழகப்பழக பிடித்து நெருக்கமாக உணர வைத்து விடுகின்றன.
‘என்னுடன் முக்கிய தருணங்களில் உடன் இருந்தவர் இவர்!’ என்று சில மனிதர்களை சொல்வது போல், நம்முடன் எல்லா நேரங்களிலும் இருப்பது வாழ்ந்த வீடுதானே. இல்லை, நம்முடன் இல்லை, அதனுள் நாம் இருந்தோம், இருக்கிறோம்.
குடியிருக்கும் நாட்களில் நம் நினைவுகளால் நிரப்படும் வீடு, குடி பெயர்ந்த பிறகு நம் நினைவுகளில் உறைகிறது. போக்கும் வரவுமில்லாப் புன்னியனின் தாள் சேர்ந்து பிறப்பும் இறப்புமில்லாப் பெருவாழ்வை ‘வீடு பேறு’ என்கிறது நம் சமய நெறி. மறுமை குறித்து அது சொல்லப்படுகிறதென்றாலும், இம்மையிலும் வாழு நல்ல வீடு அமைவது பேறுதான். சரியான அமைப்பான வீடு அமைவது பெரும் பேறு.
சிறு சிறு சங்கதிகளிலும் கூட வசிக்கப் போகிறவர்களை மனதில் கொண்டு பார்த்துப் பார்த்து வீட்டைக் கட்டும் கட்டுமானர்கள் என்னைப் பொறுத்தவரை பெரும் சேவை செய்பவர்கள். கொடுத்த பணத்தைத் தாண்டியும் வாழும் வரை உடனிருக்கிறது அந்த வசதிகள் அந்த வீட்டில் வசிப்போர்க்கு.
சில வீடுகளை விட்டு குடிபெயரும் போது கண்கள் பனித்து விடுகின்றன. சில வீடுகள் உள்ளே நுழைந்த முதல் நாளே பழகிய ‘நம் வீடு’ உணர்வைத் தந்து விடுகின்றன. எனக்கு இரண்டுமே நிகழ்ந்தது இவ்வாரம், ஆர் ஏ புரத்திலிருந்து அண்ணா நகருக்கு குடிபெயர்ந்த போது.
– பரமன் பச்சைமுத்து
அண்ணா நகர்
16.06.2021
Facebook.com/ParamanPage