
நகரில் ஒரு புறம் இளம்பெண்களை ஒருவன் தொடர்ந்து கடத்திக் கொண்டிருக்க, மறுபுறம் சிபிஐ அதிகாரியொருவர் விபத்தில் பார்வையையிழக்க, யதேச்சையாக அவன் பார்வையில் இவர் விழுந்தால்… கண் பார்வையற்ற நாயகி தன் சிபிஐ ‘அறிவுக்கண்’ கொண்டு எதிர்கொள்வதை த்ரில்லர் திரைக்கதையில் சொன்னால்… ‘நெற்றிக்கண்!’!
கொரிய திரைப்படத்தின் தமிழாக்கம் என்கிறார்கள். இதே கொரியப் படத்திலிருந்து உற்சாகமாகிதான் மிஷ்கி்ன் ‘சைக்கோ’ எடுத்தாரோ என படம் நெடுகவும் எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை. பாத்திர வடிவமைப்பு, கதை வடிவமைப்பு என பல பொருத்தங்கள் படம் முழுக்க.
அடித்து ஆடுவதற்கு நயன்தாராவுக்கு நல்ல களம். விளையாண்டிருக்கிறார்.
படத்தின் தொடக்கத்திலேயே இவன்தான் வில்லன் என்று காட்டி விட்டு கதையமைத்தது சுவாராசியம்தான்.
முக்கால் வாசிப் படம் விறுவிறுவென்று நகர்ந்தாலும், கடைசி சில நிமிடங்களை இன்னும் நெருக்கியிருக்கலாம்.
காவல்துறையின் விசாணையில் இருக்கும் ஒரு குற்றவாளி, துறை உயர்அதிகாரி முன்பு இப்படியா நடந்து கொள்வான், அதிகாரிகளும் இப்படிப் பார்த்துக் கொண்டிருப்பார்களா போன்ற பல லாஜிக் சொதப்பல்கள் இருந்தாலும் ‘ஓடிடி’யில் பார்க்கலாம்.
வி-டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘நெற்றிக்கண்’ : ஒன்றரைக் கண்’ – பார்க்கலாம் விடுங்க.
– பரமன் பச்சைமுத்து