மறைந்த ஒருவரின் நினைவாக சிலை வைப்பார்கள், மணி மண்டபம் கட்டுவார்கள், பெரிய படம் வைத்து மரியாதை செய்வார்கள்.
ஓர் ஊருக்கே பயன்படும் அளவிற்கு ஓர் ஊருணியை செப்பனிட்டு ஊருக்கே பயன்படக் கொடுத்தவர்களும் இருக்கிறார்கள்.
மறைந்த எழுத்தாளர் அசோகமித்ரனின் மகன் அதைச் செய்து மிகச் சிறந்த முன் மாதிரியாக உயர்ந்து நிற்கிறார்.
சிதம்பரம் வட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த குமுடிமூலை கிராமத்தில் தூர்ந்து கிடந்த குளத்தை தூர்வாரி ஆழப்படுத்தி கான்க்ரீட் இட்டு கரையை பெருமளவு உயர்த்தி, அருகருகே மக்கள் இளைப்பாற இருக்கைகள் செய்து தன் தந்தை எழுத்தாளர் அசோகமித்ரனின் நினைவாக அதை அந்த ஊருக்குத் தந்திருக்கிறார் மகன்.
ஒன்றரை ஏக்கர் பரப்பளவிற்கு நீர் நிறைந்து பெரும் ஏரி போல இருக்கிறதாம் குமுடிமூலை குளம் இப்போது. ஊர்க் குளத்தில் நீர் பெருக, ஊர் மக்கள் மகிழ்ச்சி பெருக, கேட்கவே நிறைவாக இருக்கிறது.
இதை சில ஊர்களுக்கு செய்ய வேண்டும் என ஆசை வருகிறது நமக்கு.
இதுதான் மறைந்தவர்களுக்கு செய்யப்படும் மிகச்சிறந்த நினைவு அமைப்பு.
அசோகமித்திரனின் மகனுக்கும் குடும்பத்தாருக்கும்… மலர்ச்சி வணக்கம்!
வாழ்க!
– பரமன் பச்சைமுத்து
17.09.2021