புவனகிரி பள்ளி – 2

*2*

*புவனகிரி பள்ளி*

( சாயப்பு வாத்தியார் பற்றிய முந்தைய பதிவு பல்வேறு குழுக்களுக்கும் பகிரப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றதாக அறிகிறோம். ‘பரமன், சாயப்பு வாத்தியார்ன்னா அந்த +2 கெமிஸ்ட்ரி வாத்தியாரா?’ என்று கேள்வி அனுப்பியிருக்கிறான் பங்காருபேட்டையிலிருந்து முன்னாள் புவனகிரி மாணவன், இந்நாள் ரயில்வே ஊழியன். பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்புக்கு வேதியல் எடுத்தது, ’16 வயதினிலே’ படத்து டாக்டரை நினைவுபடுத்தும் ‘ஷபி வாத்தியார்’ரும், அதன் பின்பு புவனகிரி பெண்கள் பள்ளியிலிருந்து மாற்றலாகி நம் ஆண்கள் பள்ளிக்கு வந்த, எதையும் சட்டை செய்யாமல் தேமேயென்று போகும் ‘பஷீர் வாத்தியார்’ரும். நாம் குறிப்பிடும் ‘சாயப்பு வாத்தியார்’ வேறு. (‘ஏஎஸ்டி’ –  ஏ சையத் டார்விஷ் என்பது அவர் பெயர் என்பது நினைவு).)

புவனகிரி பள்ளியின் தன்மையை புரிந்து கொள்ள, எண்பதுகளின் இறுதியில் இருந்த புவனகிரியையும் அதன் சுற்று வட்டாரத்தையும் அறிய வேண்டும்.
(எம்ஜிஆர் அரசு, புவனகிரி எம்எல்ஏ விவி சுவாமிநாதன்! சிதம்பரம் பாராளுமன்றத்தில் வள்ளல் பெருமான். விடுதலை சிறுத்தைக்கெல்லாம் முன்னோடியான இளையபெருமாள் இங்குதான் இருந்தார்)

….

தமிழகத்தின் பெரும்பாலான நதிகளைப் போலவே மேற்கிலிருந்து கிழக்காகப் பாயும் வெள்ளாற்றின் கரையில் ஒரே நேர்க்கோட்டில் ஒரு பெரிய படுக்கையாக விரிந்து கிடந்தாலும் புவனகிரி உண்மையில் ஒன்றல்ல, மூன்று.

கடலூர் சாலையில் முட்லூரிலிருந்து வரும் போது உடையாரப்பன் கோவிலருகில் ஒரு திருப்பத்தில் இருக்கும் திருவள்ளுவர் சிலையிலிருந்து உமர்கயாம் வீடு, பேருந்து நிலையம், சாமுண்டீஸ்வரி கோவில் வரை கீழ்புவனகிரி எனவும், சேத்தியாதோப்பிலிருந்து வரும் பாதையில் பெருமாத்தூர் எல்லையைத் தாண்டி ஆண்கள் மேல் நிலைப்பள்ளியிலிருந்து ‘ஒன் வே ட்ராஃபிக்’ திருப்பம் தாண்டி கொஞ்சம் தூரம் வரை மேல்புவனகிரி எனவும், இடைப்பட்டதை புவனகிரி எனவும் கொள்வார்கள் ( இதில் மாற்றுக் கருத்து கொள்வோரும், எல்லையை வேறு மாதிரி சொல்வோரும் உண்டு)

சாமுண்டீஸ்வரி கோவிலுக்குப் பின்புறம் போகும் சாலையில் இத்தனை பட்டு கடைகளோ, இன்று அங்கிருக்கும் ராகவேந்திரா கோவிலோ அங்கு அன்று இல்லை. கடைவீதியில் மட்டுமே கடைகள் மற்றதெல்லாம் கிட்டத்தட்ட குடியிருப்புகள் என்றிருந்தன.

இப்போது நாம் பயன்படுத்தும் வெள்ளாற்றுப் புதிய பாலமோ, பாலத்திற்கு திரும்பும் முன் இடது பக்கம் இருக்கும் அந்த சிலையோ அப்போதெல்லாம் இல்லை.  இன்று இருக்கும் பேருந்து நிலையக் கட்டிடம் கூட இல்லை. அங்கே வேறு கட்டிடமும் நாராயண ஐயர் நடத்திய உணவகமும் இருந்தன. பேருந்து நிலையத்திற்குள் புகுந்து சின்ன தேவாங்கர் தெருவிற்குப் போவதற்கு வழியும் இருந்தது.  இன்று அரசன் மளிகை, மணி ஜூவல்லர்ஸ் கட்டிடம் இருக்கும் இடத்தில் ராஜசேகரின் மரவாடியோ அல்லது வேறு ஏதோ இருந்தது. சாமுண்டீஸ்வரி கோவிலே கூட இன்னும் கீழே அமுங்கி இருந்தது.

பாலத்திற்கு திரும்பும் முன் ஆபிதா வீடியோ விஷன், லாட்ஜ், பேக்கரி, பாலத்திற்கு நேர் எதிரே இமாம் பாஷா நியூஸ் ஏஜெண்ட், சில கடைகள், ஆஞ்சநேயர் கோவில், பெண்கள் பள்ளி, பாய் எலக்ட்ரிகல்ஸ் கடை, வாழைப்பழம் கடை, ராமலிங்க சுவாமி மடம், அதையொட்டி செட்டியார் ரோஸ் மில்க் கடை, மளிகை கடை, எதிரில் வெற்றிலைக் கடை, காய்கறி கடைகள் சந்து, இனிப்பு கடை, ஆசியா சைக்கிள் மார்ட், புவனகிரி மெடிக்கல்ஸ், ஜெயா காபி, ராஜா ஜெனரல் மெர்ச்சண்ட்ஸ், பாண்டுரங்க செட்டியார் கடை, கோவிந்தராஜுலு செட்டியார் ஜவுளிக்கடை, சோழன் மளிகை, சாம்பசிவ செட்டியார் கடை, நாட்டு மருந்து கடை, பரணி மெடிக்கல்ஸ், டிடிகே கடை, இனிப்பு கடை (ராதா ஸ்வீட்ஸ்?), ஸ்ரீராம் அச்சகம், பாத்திரக்கடை, பெயிண்ட் கடை, ரங்கராஜா திரையரங்கம், புவனகிரி காவல் நிலையம், புவனகிரி அஞ்சல் அலுவலகம், இந்தியன் வங்கி, எதிரில் சின்னையன் சைக்கிள் கடை, மேலே அன்பழகன் வாத்தியாரின் ‘என்டிசி’, தண்ணீர் டேங்க், பாரதி ஆங்கிலப் பள்ளி என மொத்த புவனகிரியின் கடைகளும் இப்படித்தான் இருந்தன கடைத்தெருவில்.

சிபிஎஸ்சி பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என எதுவுமே இல்லாத எண்பதுகளில் சுற்று வட்டாரத்திற்கே ஆறாம் வகுப்பிற்கான பள்ளி என்றால் அது புவனகிரி ஆண்கள் பள்ளியும், புவனகிரி பெண்கள் பள்ளியும்தான்.  

விறகு கடை வைத்திருந்த வேணு அவர்களின் மகன், கோவிந்தராஜூலு செட்டியார் குடும்பத்தின் பிள்ளைகள், ஏபிடி பார்சல், நாட்டு மருந்துக் கடை வைத்திருப்பவர், மேல் புவனகிரி அவுல் பட்டறை வைத்திருப்பவர் மகன், சௌராஷ்ட்ரத்தெருவில் சாயப்பட்டறையில் இருப்பவர் மகன், மேல குறியாமங்கலத்தில் கூலி வேலை செய்பவர் மகன், கீழமணக்குடி வாத்தியார் மகன், பூதவராயன் பேட்டை விவசாயியின் மகன், சாத்தப்பாடி போண்டா கடைக்காரரின் மகன், தெற்குத்திட்டை மிராசுதாரரின் மகன், மஞ்சக்கொல்லை மல்லாட்ட கொல்லைக்காரர் வீட்டுப்பையன் என சமூகத்தின் பல நிலைகளில் இருந்தவர்களின் பிள்ளைகள் எல்லோரும் ஒரே பள்ளியில் இருந்தார்கள். புவனகிரி ஆண்கள் பள்ளி என்ற ஒரே பள்ளி அனைவரையும் அணைத்து ஏற்றுக் கொண்டு புகட்டி வளர்த்தது.  இப்படியொரு வரம் இனி சாத்தியமா என்பதே கேள்விக்குறிதான்.

அதனால்தான், கூறை வேய்ந்த வகுப்பறை, கட்டிட வகுப்பறை, மரத்தடி வகுப்பறை என எங்கும் அமர்ந்து எந்தப் பாகுபாடும் பாராமல் இயல்பாக அமர்ந்து கல்வி கற்க முடிந்தது மாணவர்களால். மழை பெய்து ஈரமான மண் தரையில் அமர வேண்டுமென்றால் ஒரு பிகுவும் செய்யாமல் செருப்பை கழற்றி விட்டு அதில் அமரத் தெரிந்தவர்கள் இப் பள்ளியின் மாணவர்கள். ( இன்று ‘பி 12 வைட்டமின்’ குறைபாட்டிற்கு காரணம் கண்டுபிடித்துள்ளோமே, அது வந்ததே இல்லை புவனகிரி பள்ளி மாணவர்களுக்கு. மண்ணோடு இருந்தார்கள் அவர்கள்)

இந்தச் சூழலில் புவனகிரி பள்ளியை உருவகித்துக் கொண்டு தொடருங்கள்.

ஆசிரியர்களை இம்மாணவர்கள் அழைக்கும் விதம் வித்தியாசமானது. ஆண் ஆசிரியர் என்றால் பொதுவாய் ‘சார்’ என்போம். பெண் ஆசிரியை என்றால் மேடம், மிஸ் எல்லாம் கிடையாது, அவர்கள் ‘டீச்சர்’, ஆமாம் ‘கடலோரக் கவிதைகள்’ படத்தில் ரேகாவை சத்யராஜ் விளிப்பாரே… அதே, அப்படியே… ‘டீச்சர்!’. தமிழ்மணி டீச்சர், சாந்தா டீச்சர் என பெயரோடு சேர்த்து அடையாளப் படுத்திக் கொள்வதே நடைமுறை.  சார், டீச்சர் என இரண்டிலும் சேராமால் தனி வழி என்றால் அவர்கள் தமிழாசிரியர்கள். ‘ஐயா’ என்பது அவர்களுக்கான விளிக்கும் சொல்.

அப்படி ஓர் ‘ஐயா’ அவர். தங்கத் தமிழாசிரியர். வண்டுராயன் பட்டிலிருந்தோ வத்தராயன் தெத்திலிருந்தோ சைக்கிளில் வருவார் அவர். காதுக்கு மேற்புரம் பக்கவாட்டில் உள்ள நீள் முடியை இழுத்து நெற்றிக்கு மேலே வாரி விட்டிருப்பார். ‘இந்த கொஞ்சோண்டு முடிக்கும் எண்ணெய் வச்சிருக்காரே இந்த ஐயா!’ என்று வியக்கும் வண்ணம் வாரியிருப்பார். நல்ல கரகர குரலும் தமிழ்ப்புலமையும் கொண்ட அவரை ‘டி ஜே ஐயா’ என்பார்கள்.

மேல்நிலை வகுப்பு ஆசிரியரான அவர் ஒன்றிரண்டு உயர் நிலை வகுப்புகளுக்கும் தமிழ் எடுத்தார். அவரது பெயர் ‘டி. ஜெயராமன்’

( புவனகிரி பள்ளி – தொடரும்)

– பரமன் பச்சைமுத்து
சென்னை
13.10.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *