

நாம் ஓடிக்கொண்டிருந்தாலும் ஒன்றும் செய்யாமலிருந்தாலும் உலகம் இயங்கத்தானே செய்கிறது.
அக்காவின் பையனையே இன்னும் சின்னவன் என்று நான் நினைத்துக் கொண்டிருக்க, அவனது பிள்ளைக்கு இன்று காதுகுத்தல் செய்து பொன்நகை பூட்டும் நிகழ்வு திருமுல்லைவாயல் பச்சையம்மன் கோவிலில்.
எல்லாக் குழந்தைகளையும் போல மொட்டையடிக்க அழுதான், காது குத்தும் போது கேவினான் சிறுபிள்ளை லித்தீஸ்வரன்.
அக்காவின் பேரன் என்பதால் எனக்கும் பேரனே அவன். நானும் தாத்தாவாகிறேன் அவ்வழியில். உருவத்தில் தாத்தாவாகவில்லையென்றாலும் உறவில் தாத்தாவாகியிருக்கிறேன்.
‘ஆன்ட்டி சொல்லாதே அக்கா சொல்லு’ ‘பாட்டி சொல்லாதே ஆன்ட்டி சொல்லு’ வகை முலாம் பூசும் வேலைகள் இல்லை என்னிடம். இவன் அப்படியே அழைக்கட்டுமே.
‘அப்பா ஐ காட் எ க்ளையண்ட் ஃபார் மை கம்பெனி டுடே. தே டெவலப் எக்ஸ்டென்ஷன் ஃபார் கூகுள் க்ரோம்!’ அழைத்து இதைப் பகிர்கிறாள் மகள்.
மரமாக நிற்கும் நாம் இன்னும் வளர உயர ஆசை கொண்டு எழும் அதே வேளையில், அடுத்தடுத்த விதைகள் விழுந்து முளைத்து செடியாகி எழுவதும் நிகழ்கின்றனதானே.
– பரமன் பச்சைமுத்து
27.10.2021