
பாலிவுட் சினிமா கனவுகளோடும் உற்சாகத் துள்ளலோடும் இளமைத் திமிரோடும், ராஜஸ்தானின் உள்ளூர் அரங்குகளில் நடனமாடிக்கொண்டிருக்கும் ஓர் அழகிய மங்கையின் வாழ்வில் ஒரு டாக்ஸி ஓட்டுநரின் வழியே ஓர் அமெரிக்க தம்பதிகள் வருகின்றனர். முதலில் மிரண்டு எதிர்த்த இளம்பெண் பின்பு பெரிய பேரத்திற்கு மடிகிறாள், அமெரிக்க தம்பதியினரின் குழந்தைக்கு தன் வயிற்றில் இடங்கொடுத்து வளர்க்க ஒன்பது மாத வாடகைத்தாயாக இருக்க சம்மதிக்கிறாள்.
‘ஒம்போது மாசம், பெத்துப் போட்டுட்டு சுடச்சுட இருவது லட்சம் வாங்கிட்டு போயிட்டே இருக்கலாம் பாலிவுட் சினிமாவுக்கு!’ என்ற கனவோடு கரு சுமக்க தொடங்கியவள் நினைப்பில் ஒரு லாரி லோடு அளவிற்கு மண் விழுகிறது. ‘ஒன்பது மாதம் படம் ஷூட்டிங்!’ என்று வீட்டில் பொய் சொல்லி இஸ்லாமிய தோழியின் ஜெய்ப்பூர் வீட்டிற்கு வருகிறாள். வயிறு வளரும் வேளையில், அடுத்தடுத்த இடிகளாக சம்பவங்கள் நிகழ்கின்றன.
தன்னால்தான் இப்படி நீ சிக்கி கொண்டாய் என்று ஆதரவாக நிற்கும் டாக்ஸி ஓட்டுநருக்கும் வருகிறது பெரும் சிக்கல்.
எல்லாம் ஒரு வழியாக முடிந்து ஆண் குழந்தை பிறந்து, குடும்பத்தாலும் ஏற்கப்பட்டு அந்தக் குடும்பத்தின் வாரிசாகவே அவன் வளர்ந்து வர, இனி பிரச்சினைகள் ஏதுமில்லை எனும் நிலையில் அமெரிக்கத் தம்பதிகள் திரும்பி வந்து குழந்தையை கேட்கின்றனர். அதன் பிறகு என்னவாகிறது என்பதை உணர்வு பூர்வாக வடிக்கிறது திரைக்கதை.
அழகான கீர்த்தி சனன் அழகாகவும் நடிக்கிறார்.
மிமியாக வரும் கீர்த்தி சனன், அந்த டாக்ஸி ஓட்டுநர், மிமியின் அப்பா, அம்மா, இஸ்லாமிய தோழி என ஒவ்வொரு பாத்திரம் கச்சிதமாக ஆனால் உணர்வு பொங்க வடிவமைக்கப் பட்டிருக்கிறது.
மராத்தியில் ஏற்கனவே வந்து வெற்றி பெற்ற படத்தை இந்தியில் எடுத்திருப்பதாக சொல்கிறார்கள். இருக்கட்டுமே, மிக நேர்த்தியாக உணர்வுப் பூர்வமாக தந்துள்ளதால், மறந்து லயிக்க முடிகிறது.
ஏ ஆர் ரஹ்மானின் ‘பரம் சுந்தரி’ பாடல் நன்று.
வி-டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘மிமி’ – உணர்வு பூர்வமான ஒரு நல்ல நாவல் படித்த உணர்வு. நிச்சயம் பார்க்கலாம்.
– திரை விமர்சனம் : பரமன்
பச்சைமுத்து
#அயலூர்-சினிமா
#இந்தி
#Mimi
#MimiReview
#OTTfilms
#Netflix
Facebook.com/ParamanPage