




‘பாய் வீட்டுக் கல்யாணத்துக்கு வந்துட்டு, சைவ சாப்பாட்டு பந்திக்கு போறீங்களே பரமன்! ‘ என்று என்னை பாவமாக பார்த்து சைவ உணவு உண்ணும் இடத்திற்கு வழி சொன்னார் அந்த தெரிந்த நண்பர்.
கீழ்ப்பாக்கம் சிஎஸ்ஐ பெயின் ஸ்கூலின் ஒரு கோடியில் போடப்பட்ட பந்தலில் நுழைந்து பந்தியில் அமர்ந்தால், என் எதிர்ப்பந்தியில் தலையில் குல்லாய் அணிந்த இளம் பிள்ளைகள் பலர் பன்னீர் டிக்காவையும், பாயசத்தையும் சுவைத்துக் கொண்டிருக்கின்றனர்.
‘என் ஆஃபீஸ் திவ்யாவுக்கும் கஜலட்சுமிக்கும் இன்னைக்கு கிருத்திகையாம், அதனால சைவம். நான் எப்பவும் சைவம். இந்த பாய் பசங்களுக்கு என்ன? ஏன் நிக்கா விருந்துல போய் சைவம் சாப்டறானுங்க?’
என் இடது புறம் உள்ள இருக்கையில் அமர்கிறார், தலையில் குல்லா அணிந்த, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் எழும்பூர் பகுதி செயலாளர் சாதிக் பாட்சா.
‘இவரும் சைவ பந்திக்கு வர்றாரு!’
….
(இருங்க! இவற்றுக்கு முன் நிக்காவை பற்றி பேசி விட்டு, அப்புறம் விருந்துக்கு வருவோம்).
புரசை ‘கார்டன் ஆயிஷா’ துணி வணிக குழும இல்லத்தின் மகன் சித்திக்கிற்கும் – வண்ணாரப்பேட்டை காஃபா க்ளோத்திங் – 70எம்எம் துணியக வணிக குழுமத்தின் மகள் ஸுல்ஃபாவிற்கும் திருமணம் என்னும் நிக்கா, புரசைவாக்கம் பள்ளிவாசலில் (‘ஜூம்மா’ என்கிறோமே, அதன் சரியான உச்சரிப்பு ‘ஜூம் ஆ’) நிகழ்ந்தது.
இதே பள்ளி வாசலில் அலிபாயின் முதல் பையன் இப்ராஹிமின் திருமணத்திற்கு போயிருந்த போது, என்னருகில் எனக்கு துணையாக அமர்ந்து பார்த்துக் கொண்ட காதர் மொய்தீனுக்கோ, எனக்கோ, அலிபாய்க்கோ அன்று தெரிந்திருக்காது இதே பள்ளிவாசலில் இன்னொரு நிக்காவில் சம்மந்தியாக காதர் மொய்தீன் அமர்வார் என்று. இறைவன் மட்டுமே அறிந்த கணக்கு!
11.15க்கு சரியாக அறிஞர் ஒருவரால் தொடங்கப்பட்டு, பள்ளிவாசல் இமாமால் இறைவணக்கமும் திருமணம் பற்றி நபிகள் சொன்னதும் விளக்கப்பட்டு, சில பெருமக்கள் வாழ்த்துதல் செய்ய, சரியாக 12 மணிக்கு ‘189 கிராம் தங்கம் பெற்றுக் கொண்டு (மகர்) என் மகளை இவருக்கு தருகிறேன்’ என்று மணமகளின் தந்தையும், ‘ஏற்கிறேன்’ என்று மணமகனும் சபையோர் முன்னே சொல்ல, இஸ்லாமிய அறிஞர் ஒருவர் துஆ செய்ய திருமணம் என்னும் நிக்கா நடந்தேறியது.
(மகளை மணம் செய்து தருகிறேன் என்று இமாம் முன்பு சொல்லும் போது, தந்தை காதரின் குரல் கம்மியதை எத்தனைப் பேர் கவனித்தார்களென தெரியவில்லை! பெண்ணைப் பெற்றோர் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய கனமான கணம் அது)
‘இறைவா இந்த மணமக்கள் வளம் பெறட்டும்! இவர்கள் பிள்ளைகள் நல்லவர்களாக இருக்கட்டும்!’ எனும் வகையில் சில நிமிடங்கள் நிகழ்த்தப்பட்ட பிரார்த்தனையில் கண் மூடி கரைந்து கலந்து, நாமும் பிரார்த்திக்கிறோம்.
(மணமகன் மட்டுமே இருக்க பள்ளிவாசலில் திருமணம் நடைபெறும். ஆண்கள் அனைவரும் பள்ளிவாசலில், பெண்கள் விருந்து மண்டபத்தில் பெண்களுக்கான பிரிவில் என்பது முஸ்லீம் திருமணத்தில் கொள்ளப்படும் முறைமை. உணவு உண்பது கூட ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு என இருவேறு இடங்களில்தான்)
நிக்கா முடிந்து மாமனார் காதரை, மணமகன் சித்திக்கை தழுவி வாழ்த்துவிட்டு குத்தாலிங்கத்தோடு நடந்து பள்ளிவாசலிலிருந்து வெளியே வந்தோம், திருமண விருந்து நடக்கும் பெயின் ஸ்கூலுக்குப் போக.
மணமகளை சந்தித்து, பார்த்து ரசித்து, மகிழ்ந்து நிறைந்து அந்த உணர்வில்தான் ‘வலிமா’ தரவேண்டும் (விருந்திற்கான பணம் / ஏற்பாடு) மணமகன் என்பது முறைமையாதலால் அவனை இழுத்துக் கொண்டு போனார்கள் மணமகளிடம் கொண்டு போய் விடுவமற்கு. நாங்களும் நடந்து வெளியேறினோம்.
வெளியே வந்ததும் காலஞ்சென்ற நசீரின் மாமனார், புரசை பள்ளிவாசலின் இமாம், மலர்ச்சி மாணவர்கள் பலர் என பலரின் விசாரிப்பிலும் அன்பிலும் நனைந்து நீந்தி பொன்னப்பத் தெருவை விட்டு வெளியேறி காரிலேறி பெயின் ஸ்கூல் வந்தோம் மதிய உணவிற்கு.
மணமகன் ஆண்கள் பிரிவிலும், மணமகள் பெண்கள் பிரிவிலும் இருக்க, வாழ்த்த வந்த ஆண்களும் பெண்களும் பிரிந்து அந்தந்தப் பகுதிக்கு சென்று வாழ்த்தி விட்டு, அவரவர்க்கான விருந்துப் பகுதிக்கு சென்றனர்.
மலர்ச்சி அலுவலக நண்பர்கள் அனைவரும் குத்தாலிங்கத்தோடு இரண்டாம் தளத்து அசைவ விருந்துப் பகுதிக்குப் போக, நானும் கஜலட்சுமியும் திவ்யாவும் சைவப் பகுதிக்கு வந்து, அதில் பெண்கள் பிரிவிற்கு அவர்களை அனுப்பிவிட்டு, ஆண்கள் பிரிவில் நான் அமர்ந்தேன்.
வாழை இலை விரித்து, இனிப்புகள், ரொட்டிகள், சோறு வகைகள், ரசம், தயிர் சோறு என 26 வகைகள் பரிமாறி அசத்தி விட்டனர்.
என் இருபக்கமும் எதிர் பக்கமும் என முஸ்லீம்கள் பலர் அமர்ந்து சைவம் உண்டு கொண்டிருந்தனர்.
இடப்பக்கத்தில் அமர்ந்திருந்த புரசைவாக்கம் ‘குட்டீஸ்’ கடையின் அதிபர் சாதிக் பாட்சாவை கேட்டேன்.
‘ஏன் நீங்க போய் சைவம் சாப்டறீங்க?’
‘பாருங்க! ஒலகத்திலயே ஈஸியானது பிரியாணிதான். கால் கிலோ கறி இருந்தா பிரியாணி செஞ்சிடலாம்! ஆனா, இத்தனை வகை சைவ வகைகள் வீட்ல பண்ணமுடியாது, பாத்துக்கோங்க!’
‘ஓகோ! அந்த சின்னப் பசங்கள்லாம் கூட வெஜ்ஜுக்கு வந்துட்டானுங்க?’
‘அவனுங்க அங்க போய் கறி எல்லாம் சாப்டுட்டு இங்க மறுபடியும் வந்துருக்கானுங்க, வெரைட்டிக்காக!’
‘அட!’
என் வலப்பக்கம் உண்டவர் எழுந்து போய்விட, அந்த இலையை எடுப்பதற்கு முன்பே வரிசையாய்
மூன்று பதின்ம வயது பிள்ளைகள் வந்து அமர்கிறார்கள்.
‘தம்பீ! நான் வெஜ் செக்ஷன் போகாமா, இங்க வெஜ் செக்ஷன்ல வந்து உட்கார்ந்திருக்கீங்க?’
‘தெனம் அதைத்தானே சாப்படறோம். அலுத்துப் போச்சி. இங்கதான் நெறைய வெரைட்டி!’
திருமண விருந்து முடித்து வெளியில் வந்து கைகழுவி காரை நோக்கி நடக்கையில், முன்பு எனக்கு வழி சொன்ன அந்த நண்பர் எங்காவது நிற்கிறாரா என்று பார்க்கிறேன். அவரிடம் இதை சொல்ல வேண்டும்:
‘பாய் வீட்டு கல்யாணத்தில கூட வெஜ்ஜுக்கு மவுசு அதிகம்ப்பா!’
…
மணமக்கள் வாழ்க!
– பரமன் பச்சைமுத்து
சென்னை
29.05.2022