
மரங்கள் எப்போதுமே எனை ஈர்க்கின்றன. சில மரங்களைக் கண்டதும் தொடத் தோன்றும், சிலதை வெறுமனே பார்க்கத் தோன்றும், இந்த மரத்தையும் அதனடியில் இருந்த கல்லிருக்கையையும் பார்த்ததும் அதில் அமரலாமெனத் தோன்றியது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இலுப்பை மரங்களாலான காடுகளாக இருந்து ‘இலுப்பை’ என்று வழங்கப்பட்டு, மருவி இன்று ‘இரும்பை’ என்றாயிருக்கிறது.
திருஞானசம்பந்தரின் பதிகம் பெற்ற தலம், கடுகுவெளி சித்தர் தவம் புரிந்த இடம், தவ வெக்கையால் சுயம்பு லிங்கம் வெடித்த இடம், மூன்றாம் குலோத்துங்க சோழன் பராமரித்து பூசித்த இடம் என கதைகள் கொண்டிருக்கும் இத்தலத்தின் குளமும் சுற்றியிருக்கும் சில மரங்களுமே எனை அதிகம் ஈர்க்கின்றன.
கோவிலுக்கு வெளியே வலப்புறம் குளக்கரையில் பரந்து விரிந்து நிற்கிறது, இல்லை இல்லை ஆளை அழைக்கிறது இந்த ஆல். காலை, மதியம், மாலை என எல்லா நேரமும் நிழலிருக்கும் போல அப்படியொரு குடையாய் வளர்ந்து நிற்கிறது இம்மரம். இவ்வளவு பெரிய மரத்தின் விழுதுகள் எங்குமே தரையில் இறங்கவில்லை என்பது நமக்கு முதலில் வந்த வியப்பு. ‘மலர்ச்சி அலுவலகம் எதிரில் நாம் வைத்த சிறு ஆலங்கன்றே வளர்ந்து அவ்வளவு விழுது விட்டுள்ளதே, இவ்வளவு பெரிய மரம் ஏன் விடவில்லை!?’ ‘அடப்பாவிங்களா… தரையை நோக்கி விரையும் விழுதுகளை வளரவே விடுவதில்லை மக்களும், அடியில் வந்து நிறுத்தப்படும் வாகனங்களும்!’ என்று புரிந்த போது, ‘யாராவது இந்த பகுதியில் இருக்கும் ஒரு சூழலியல் ஆர்வலர் ரெண்டு விழுதுகளை தரையில் பதிய குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வேலி கட்டி ஏற்பாடு பண்ணா நல்லாருக்குமே!’ என்று ஆசையும் பிரார்த்தனையுமாக மாறியது.
அடியில் போடப்பட்டிருக்கும் இரண்டு கல் இருக்கைகள், மக்களும் காதலர்களும் அமர குளத்தின் தாழ் சுவர், வெயில் புகா அடர் நிழல், குளத்தில் நீர், மேலே பறவைகள், வீசும் காற்று என எல்லாமும் சேர்ந்து மயக்கும் சூழலை தருகிறது.
இந்த மரம் என்னை ஈர்த்து விட்டது. தாய் மடியைப் போல இழுத்து அமர்த்தி விட்டது. அமர்ந்து விட்டேன்.
( இங்கிருக்கும் இன்னொரு மரம் பற்றி அடுத்து எழுதுகிறேன்)
– பரமன் பச்சைமுத்து
புதுச்சேரி
06.07.2022
#Irumbai
#Iluppai
#Puducherry
#MahaKaleshwar
#ParamanTouring
Facebook.com/ParamanPage