
தானுண்டு தன் ஆசிரியப் பணி உண்டு என்று வாழும் இன்னும் சில நாட்களில் திருமண நிச்சயம் செய்து கொண்டு வாழ்வின் புதிய அத்தியாயத்தைத்தொடங்கப்போகும் ஓர் எளிய குடும்பத்து மகளொருவள் பணிக்கு சென்ற தந்தையைக் காணோமெனத் தேடிப் போகையில் கிடைக்கும் செய்திகள் கேட்டு பதறி, குஞ்சைக் காக்க வல்லூரையே எதிர்க்கத் துணியும் கோழியாய் தவித்து எழுகிறாள். உலகமே உதறிவிட்ட நிலையில் ஒற்றையாய் நின்று அவள் அறிந்திராத அவள் அறிவிற்கெட்டாத காவல்துறை, நீதிமன்றம், சட்டம், நடைமுறைகள் தாண்டி அந்தத் தந்தையை மீட்டாளா அல்லது வேறு எதுவும் நடக்கிறதா என்பதை சீரான சித்திரமாக்கி ‘கார்கி’ என்ற பெயரில் தந்து கலங்கடிக்கிறார் இயக்குநர்.
சென்னையில் ஓர் அடுக்கக் குடியிருப்பில் நடந்த உண்மைக் கதையை எடுத்துக் கொண்டு அதில் சில மாற்றங்களை செய்து சிறப்பான ‘புலன் ஆய்வு’ படமாகத் தந்திருக்கிறார் கௌதம் ராமச்சந்திரன்.
கவனிக்க வேண்டிய நல்ல படம். திரைத்துறை மாணவர்கள் கற்றுக் கொள்ள பல உண்டு இந்தத் திரைப்படத்தில். பெரிய பட்ஜெட், சண்டைகள், பயங்கர பாடல்கள், வெளிநாட்டு லொகேஷன்கள் என எதுவுமே இல்லாமல் கூட, நல்ல கதையும் அதை சரியாக சொல்ல தெரிவதுமே போதும் ஒரு வெற்றிப்படத்தை தருவதற்கு என அடித்து சொல்கிறது ‘கார்கி’.
ஒரு பள்ளி வகுப்பறையில் தேர்வெழுதும் காட்சியில் தொடங்கும் படம் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களைக் கொண்டு ஆட்டோவில் பயணிக்கையில் வெளியிலிருந்து வரும் சுதந்திரக் காற்றை அவள் உறிஞ்சி சுவாசிக்கும் கடைசிக் காட்சிக்கு முந்தைய காட்சி வரை நம்மை கட்டிப் போடுகிறது படம்.
மொத்த படத்தின் திரைக்கதையையும் உணர்ச்சிகளையும் தன் மேல் சுமந்து கொண்டு கார்கியாவே மாறி நடிப்பில் அசத்தியிருக்கிறார் சாய் பல்லவி.
சாய் பல்லவி, ஆர் எஸ் சிவாஜி, காளி வெங்கட், ‘பொன்னியின் செல்வன்’ ஐஸ்வர்யா லெட்சுமி என ஒவ்வொருவரும் அவரவர் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.
நாயகனாகத் தெரிபவன் சாதாரன மனிதனாக மாறலாம், எளிதையாகத் தெரிபவள் வேண்டுமெனில் நாயகியாக உயரலாம், எல்லா விதமான மனிதர்களாலும் ஆனது இவ்வுலகு என்பவை படம் ஓட ஓட நம்மில் ஓடுபவை.
வி- டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘கார்கி’ – அழுத்தமான கிராதகி. நேர விரயம் ஆகாது. பாருங்கள்.
– திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து
#Gargi #GargiFilm #GargiFilmReview #ParamanReview #ParamanFilmReview
#ManakkudiTalkies