
முன் குறிப்பு 1:
‘மாமன்னன்’ சொல்லும் அரசியல், அதன் பின்னே இருக்கும் வேறு செய்திகள் என நிறைய பகிரப்படும் வேளையில் இந்த விமர்சனத்தை எழுதுகிறோம். திரையில் பார்த்த ‘மாமன்னன்’ திரைப்படத்தை மட்டுமே குவியமாகக் கொண்டு செய்யப்பட்ட விமர்சனம் இது. படத்திற்கான விமர்சனம்! நன்றி!
முன் குறிப்பு 2:
இப்படமே உதயநிதியின் கடைசிப் படம் என்று பேச்சு அடிபடுகிறது. அரசியல் வாழ்வுக்காக படத்தயாரிப்பு நிறுவனங்களிலிருந்து வெளி வரட்டும். ஆனால், நடிப்பது அவருக்கு நிறைய நல்லது செய்யும், நிறைய மக்களிடம் அவரையும் அவர் சொல்ல விரும்பும் கருத்துகளையும் கொண்டு சேர்க்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.
இனி, இவற்றிற்கு சம்பந்தமேயில்லாமல் பட விமர்சனத்திற்கு செல்வோம். ஆமாம், பட விமர்சனம் மட்டுமே!
….
‘மாமன்னன்’ – திரை விமர்சனம்
யார் வம்புக்கும் போகாத சேலம் பகுதியில் வசிக்கும், கொடுஞ்செயல்கள் நடந்த போதும் உள்ளேயே குமுறி பின் விழுங்கி மகனோடு உறவையே இழந்து ‘நிற்கும்’ ஒடுக்கப்பட்ட இனத்தின் மன்னு, மகனாலேயே சமூக செயல்பாடுகளை எதிர்த்து நின்று வென்று தன் இருக்கையை பிடித்து மாமன்னன் ஆக ‘அமருகிறார்’.
சிறு வயதிலிருந்தே கனவில், நினைவில், வாசிக்கும் இலக்கியத்தில், வரையும் ஓவியத்தில், தான் கொள்ளும் பணியில், தன் கையில் குத்தியிருக்கும் பச்சையில் என பன்றிகளோடே கலந்திருக்கும், பன்றிகள் பறக்க வேண்டும் என்று கனவு காணும் ஒடுக்கப்பட்ட இனத்தின் இளைஞனின் வாழ்வில், பன்றிகளை குதறும் வேட்டைநாய்களை வளர்க்கும், வேண்டாமென்றால் பன்றிகளை மட்டுமல்ல பார்த்து பார்த்து தான் வளர்த்த தன் நாய்களையே துடிக்கத் துடிக்க அடித்து கொல்லும் மேல் சாதி மனிதனொருவன் குறுக்கிட நேருகிறது. கடந்த கால ஒடுக்குமுறை வடுக்களையும் கசப்புகளையும் சுமக்கும் இவனும், சாதிக்காக எவர் காலிலும் விழும் எவரையும் அடித்துக் கொல்லும் எதையும் செய்யும் அவனும் மோதினால் எப்படி இருக்கும்? ரணகளமும் ரத்தக் கவிச்சியும்தானே! அதை பன்றியும் நாயுமாய் உணர்ச்சிகள் சொட்டச் சொட்ட பிரமாதமாகத் தந்திருக்கிறார் மாரி செல்வராஜ்.
வடிவேலு… அடேயப்பா, இதுவரை பார்த்தேயிராத முற்றிலும் மாறுபட்ட வடிவத்தில். மகனிடம் தவிக்கும் அப்பனாக, மனைவியின் காலில் கையூன்றி கொட்டித் தீர்க்கும் கணவனாக, எம்எல்ஏவே ஆனாலும் மாவட்ட செயலாளர் முன்னே நிற்கும் தாழ்ந்த சாதி மனிதனாக, கடைசி காட்சியில் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ சொல்லும் போது கம்பீரமாக என படம் முழுக்க தந்த பாத்திரத்தை வாழ்ந்திருக்கிறார் வடிவேலு.
இளம் பிள்ளைகள் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டதை பொறுக்க முடியாமல் துடித்து பொங்கி, பிறகு எதுவும் முடியாத ‘யதார்த்த அரசியல் சமூக நீதி’யை கண்டு தனியே நின்று குமுறி அழுது உள்ளே விழுங்கும் காட்சி வடிவேலுவின் பெயரை பல காலத்திற்கும் பேச வைக்கும். (இந்த ஆண்டு வடிவேலுக்கு விருது உண்டு என்பது என் எண்ணம். படத்திற்கும் தரப்படலாம்!)
நன்றாக பாட வரும் வடிவேலுவை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
தான் வரும் காட்சிகளில் வேறு எவரையும் பார்க்கக் கூட விடாமல் மொத்த படத்தையும் வடிவேலுக்கு நிகராய் ஆக்கிரமித்து அசரடிக்கிறார் ஃபகத் ஃபாசில். வடிவேலு, உதயநிதி அவர் வீட்டிற்கு வரும் அந்தக் காட்சி, ‘ஊர்ல எதாவது பெரிய சம்பவம் நடக்கனும்’ எனும் அந்த காட்சி, அண்ணனை அடக்கும் காட்சி, அதன் பின்பு ‘சிகரட் பிடிண்ணா!’ எனும் காட்சி என படம் நெடுக பட்டையைக் கிளப்புகிறார்.
சாதீய கொடுமைகளின் வடுக்களை நெஞ்சிலும் மூக்கிலும் சுமந்து கொண்டு எதிர்த்து நிற்கும் இளைஞனாக உதயநிதி தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். உதயநிதியின் திரைப் பயணத்தில் இது ஒரு முக்கிய நல்ல படம்.
கீர்த்தி சுரேஷ் நல்ல நடிகை, முயன்றிருக்கிறார். அந்தப் பாத்திரத்திற்கு ஒட்டவில்லை.
வடிவேலுவின் மனைவியாக வரும் கீதா கைலாசம் கொஞ்சம் வசனமே என்றாலும் உணர்ச்சிகளை வைத்தே படம் முழுக்க நிறைகிறார் என்றால், படம் முழுக்க வசனமே இல்லாமல் வந்தும் சிறப்பாக செய்திருக்கிறார் ஃபகத் ஃபாசிலின் மனைவியாக வரும் ரவீணா ரவி.
பாத்திரங்களின் உணர்ச்சிகளை படம் கடத்த விரும்பும் உணர்ச்சிகளை பின்ணணி இசை மூலம் கடத்தி விடுகிறார் ஏ ஆர் ரஹ்மான். சில முக்கிய இடங்களில் இசையேயில்லாமல் வெறுமனே விட்டு அதை நிகழ்த்துகிறார்.
சமூக நீதி பேசும் கட்சிகள் கடைசியில் வாக்கு வங்கி என்று வரும் போது ‘அரசியல்’ செய்கின்றன என்று கட்சிகளின் தோலுரிக்கப்படுகிறது படத்தில்.
‘எல்லாம் செஞ்சிருந்தும் இந்த சாதியைப் பாத்து நிறுத்திடறாங்களேடா!’ என்பதை உணர்த்த வைக்கப்பட்ட தேர்தல் கள காட்சிகள் படத்தை தளர்வாக்கி மெதுவாக்கி விடுகின்றன என்பது பலவீனம்.
வி டாக்கீஸ் வெர்டிக்ட் : ‘மாமன்னன்’ – மன்னு மாமன்னனாக மாறி அமரும் கதை – பாருங்கள்.
– திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து
#Mamannan #MamannanFilmReview #Vadivelu #MariSelvaraj