‘பூவ எடுத்து ஒரு மாலைத் தொடுத்து வச்சேனே… என் சின்ன ராசா!’
என்ன ஒரு பாடல் இது!
தவணை முறை என்பது போல ‘பூவ’வுக்கும் ‘எடுத்து ஒரு மாலைக்கும்’ நடுவில் நிறுத்தி இடைவெளி விட்டு பிறகு தொடங்கும் பாடல்.
|பூவ| |எடுத்து ஒரு மாலை| |தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா| அதுவும் அதே வரிகள் ஒவ்வொரு முறையும் இரண்டு முறைகள் வருவதால் அந்த இடைவெளியே ஓர் ஒழுங்கைத் தந்து நம்மை ஈர்த்துவிடும்.
இப்படித்தான் ஓர் ஒழுங்கான இடைவெளி வரும் போல என நினைத்தால் சரணத்தின் வரிகள் அவற்றை தகர்த்து விடும். ‘காத்துல சூடம் போல கரையிறேன் உன்னால…’ என எந்த இடைவெளியும் இல்லாமல் ஒன்றன் மீது ஒன்று ஏறி வழுக்கி நம்மை மயக்கும். ‘சரி… இனி இப்படித்தான் போல’ என நினைத்தால் தடாலென்று பழைய படி இடைவெளி விட்டு |கண்ணாடி வளை| |முன்னாடி விழ| |என் தேகம் மெலிஞ்சாச்சு| என வந்து விழும்.
|சின்ன வயசுப்புள்ள| |கன்னி மனசுக்குள்ள| |வண்ணக் கனவு| |வந்ததேன்| என்று மறுபடியும் தவணை விட்டு ஓர் ஒழுங்கான இடைவெளி நம்மை ஈர்க்கும்.
என் தந்தையைப் போல ராகங்கள் தாளங்கள் தெரிந்தவனல்ல நான். வெறும் ஞானசூனியமான என்னையே இப்படி ரசிக்க வைத்த பாடல் இது.
இந்தப் பாடல் வந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு வந்தது வேறொரு பாடல்.
‘ஒரு தெய்வம் தந்த பூவே… கண்ணில் தேடல் என்ன தாயே!’ இதுவும் ஓர் ‘அடேயப்பா’ பாடல்.
வரிகளும் அட்டகாசம், பாடலும் அட்டகாசம். ‘காதல் மலரும் நீ… கருவில் முள்ளும் நீ’ என்ற வரி முடியும் போதே பாடிக்கொண்டிருக்கும் போதே ‘செல்ல மழையும் நீ..’ என்பது தொடங்கி விடும், ‘இதிலென்ன அதிசயம் அவர் அந்த வரியை பாடி முடிக்கறதுகுள்ள இவரு இந்த வரியை தொடங்கிட்டாரு! போவியா!?’ என்று நீங்கள் எண்ணலாம். மரியாதைக்குரியவரே, அந்த பாடலை பாடியது இரண்டு பேர் அல்ல, ஒரே ஒருவர். முதல் வரியில் ஒலித்துக் கொண்டிருக்கும் அவரது குரல் முடிவதற்குள் அவரது குரலே அடுத்த வரியைத் தொடங்கி விடும். நவீன தொழில்நுட்பத்தை வைத்து இதை சாதித்தார் இசையமைப்பாளர் அன்று.
இரண்டுமே என் மனதில் ஒட்டிக்கொண்டு மறுபடியும் மறுபடியும் உள்ளே ‘ரிப்பீட் மோடில்’ ஓடும் பாடல்கள்.
முதல் பாடலை உருவாக்கியது இசைஞானி இளையராஜா. இரண்டாவது பாடலை உருவாக்கியது ஏஆர் ரஹ்மான். இரண்டு பாடல்களையுமே பாடியது பாடகர் ஜெயச்சந்திரன். முதல் பாடலில் கே ஜே ஏசுதாஸைப் போல வழுக்கும் குரலும், 16 ஆண்டுகள் கழித்து பாடிய இரண்டாம் பாடலில் ‘80% வழவழப்பு, 20% கரகரப்பு’ என ரகளையான கலவை கொண்ட பிறிதொரு குரலும் கொண்டு பாடியிருப்பார் ஜெயச்சந்திரன்.
‘இல்ல இதைப் பாடியது சாகுல் ஹமீதோ!’ என்று நம்ம முடியாமல் நிற்கும் படி ‘கத்தாழங் காட்டு வழி’ பாடலை பாடி அசத்தியிருப்பார். ‘கத்தாழங் காட்டு வழீஈஈஈஈஈஈஈ’ என்று இழுத்து பாடுவதில் ஈர்ப்பார். கோரஸ் போல் வரும் ‘வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா’ முடிந்த்தும் மறுபடியும் வரும் ‘கத்தாழங்காட்டு வழி’யில் எஸ்பிபி போல் குறிப்பாய் ‘வாக்…கப்பட்டு போறவளே!’ எனும் இடத்தில் ‘அட!’ போட வைப்பார். ‘சோதனை தீர வில்லை, சொல்லி அழ யாரும் இல்லை’, ‘பூ பூத்த செடியக் காணோம் வெதை போட்ட நானும் பாவம்!’ ‘ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு!’ என பல நல்ல பாடல்களை பாடியவர் ஜெயச்சந்திரன்.
போய் வாருங்கள் ஜெயச்சந்திரன்! உங்களுக்கு எங்களது புகழஞ்சலி. ‘கத்தாழங் காட்டு வழி’யெல்லாம் தாண்டி கடவுள் வழிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள உங்களுக்கு மனப் ‘பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வைக்கிறோம் சின்ன ராசா!’
– பரமன் பச்சைமுத்து
மணக்குடி
11.01.2025
#RipJayachandran #SingerJayachandran #ilaiyaraja #ArRahman #ParamanPachaimuthu #பரமன் #பரமன்பச்சைமுத்து