காடு, மலை, பள்ளத்தாக்கு… தேக்கடி – 2 : பரமன் பச்சைமுத்து

ஒரு காலத்தில் ஆப்பிரிக்காவில் மடகாஸ்கர் பகுதியோடு இருந்து, புவித் தட்டுகளின் நகர்வால் பிய்த்துக்கொண்டு ஆசிய இந்தியாவில் இப்போது இருக்கும் இடத்தில் ஒட்டிக் கொண்டதாக சொல்லப்படும், மராட்டிய குஜராத் எல்லையில் தொடங்கி கோவா, கர்நாடகம், கேரளம் என விரிந்து தமிழக கன்னியாகுமரியில் முடியும் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் ஒரு பகுதியில் பெய்யும் பெருமழை நீர் முழுக்க மேற்கே கடலில் ஓடிக் கலப்பதைக் கண்டு, ‘இந்த நீரை கிழக்கே திருப்பினால் வைகையை மட்டுமே நம்பியிருக்கும் மழைமறைவுப் பகுதியான மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நீர் கிடைக்குமே! ஓர் அணை கட்டுவோம்!’ என்று சேதுபதி மன்னர் முடிவெடுத்தார்.

பொன்னியாற்றின் பெருமளவு நீர் கிழக்கு நோக்கி ஓடி கடலில் கலப்பதை தடுத்து மடைமாற்றி கொள்ளிடத்தில் விட்டு தஞ்சையை செழிக்க வைக்க சோழவேந்தன் கரிகாலன் கல்லணை கட்ட சிந்தித்தது போலவே மன்னர் சேதுபதியின் அரசும் சிந்தித்திருக்கிறது.

சேதுபதி மன்னரின் ஆணைக்கேற்ப திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன. பெருமழை பொழிவு, நுண்தீமி தொற்று, பூச்சித் தாக்குதல், கொள்ளை நோய் எனப் பல காரணங்களால் பணி செய்பவர்கள் கொத்துக் கொத்தாய் மாய்ந்து விழ, திட்டம் நின்று போனது. அடுத்தடுத்து வந்தவர்கள் தொடங்கினாலும் சென்னை மாகாணத்தில் ஏற்பட்ட கடும் பஞ்சம், அணை கட்டுவதற்கான செலவு அதிகரிப்பு என பல காரணங்களால் தள்ளிப் போனது.

பிரித்தானிய அரசு வந்த பிறகும் இந்தத் திட்டம் பலமுறை பரிசீலனை செய்யப்பட்டு பல முறை நிறுத்தப் பட்டதாம். 1882ல் கர்னல் ஜான் பென்னிகுயிக்கிடம் அந்தப் பணி ஒப்படைக்கப் பட, கையிலெடுத்தார் பெருமகனார்.

1887ல் திட்டத்தைத் தொடங்கிய பென்னிக்குயிக்கும் இடையூறுகளை எதிர்கொண்டார். யானைகளின் தாக்குதல், விஷப் பூச்சிகள், காட்டு விலங்குகள், பெரும் மழைப் பொழிவு, திடீரென உருவாகும் காட்டாறுகள் என இடையூறுகள் வந்தனவாம். மூன்று ஆண்டுகள் கட்டிய அணை பெருமழை வெள்ளத்தில் அடித்துப் போனது பெருங்கொடுமை. ‘இனி இந்தத் திட்டத்திற்கு நிதி தரமாட்டோம். எல்லாம் போதும் மூடிட்டு போ!’ என பிரித்தானிய அரசு சொல்லிவிட, தன் கனவுத் திட்டத்தை கை விட முடியாமல் சொந்த ஊர் இங்கிலாந்து சென்று தன் சொத்துக்களை விற்று நிதி கொண்டு வந்து பெரும்பாடு பட்டு 1895ல் கட்டி முடித்தார் பென்னி குயிக்.

அவர் கட்டிய அந்த ‘முல்லையாறு – பேரியாறு அணை’யால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் பகுதி உயிர் பெற்று நிற்கிறது இன்று. இந்தப் பகுதிகளின் மக்கள் அவரை போற்றிக் கொண்டாடுவது இதனால்தான்.

‘முல்லயாறு – பேரியாறு அணை’ மருவி ‘முல்லை பெரியாறு’ ஆகி ஆங்கிலத்தில் ‘முல்லை பெரியார்’ ஆகி, தற்போது வழக்கிலும் ‘முல்லை பெரியார் அணை’ ஆகி விட்டது.

பென்னி குயிக்கின் இந்த அணை கட்டப்பட்டு மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர் தடுத்து நிறுத்தப் பட்ட போது, சேர்ந்த நீரின் மட்டத்தில் தேக்கு மரங்கள் நிறைந்த இந்தப் பகுதி் நீரால் சூழ்ந்தது. உயர்ந்து வளர்ந்திருந்த ‘தேக்கு’ மரங்கள் நீருக்குள் ‘அடி’யில் போனதால் அதுவரை பெயரில்லாத அந்தப் பகுதிக்கு ‘தேக்கடி’ என்று குறிப்பிடும் வழக்கு வந்ததாம்.

மதுரை சேதிபதி தொடங்கி கர்னல் ஜான் பென்னி குயிக் வரை எத்தனையெத்தனை பேர் எத்தனையெத்தனை தொழிலாளர்கள் உயிர் கொடுத்து உழைத்திருப்பார்கள் இந்த அணை உருவாக… வியப்பும் நெகிழ்வும் கலந்து வருகிறதுதானே? எனக்கும்!

பென்னி குயிக்கின் அந்த அணையையொட்டிய பகுதியிலுள்ள அடர் காடுகளில் வரையறுக்கப்பட்டு உருவாக்கப்பட்டதே ‘பெரியார்(று) தேசியப் பூங்கா’.

‘இங்கே என்ன இருக்கிறது? ஏன் போகனும் அங்கே?’

(தொடர்வோம்)

2

– பரமன் பச்சைமுத்து
கிளப் மகேந்திரா, தேக்கடி
31.01.2025

#ParamanTouring #ParamanLifeCoach #பரமன்பச்சைமுத்து #ParamanLifeCoach #ParamanPachaimuthu #தேக்கடி #Thekkady #Periyaru #periyarlake #Pennycuick #KingSethupathy #Madurai #PeriyarNationalPark #KeralaTourism #Westernghat

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *