நண்பர்களோடு கதைத்தல் அன்னை தந்தையரோடு அளவளாவுதல் வானவெளியில் பறத்தல் மருத்துவமனையில் சிகிச்சை மறுத்தல் என வாழ்வின் எல்லா இடங்களிலும் தனது இன்பம் தனது துன்பம் என்று தனது உணர்ச்சிகளை மட்டுமே முக்கியமாய் கொண்டு அடுத்தவரின் வலிகள் உணர்வுகள் பற்றி சட்டையே செய்யாத, பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒரு மூர்க்கனுக்கும், அடுத்த மனிதரையும் அன்போடு அரவணைக்கும் பெண்மை மதிக்கப்படுவதை விரும்பும் தன்னை மதிக்கும் மெல்லிய குணம் கொண்ட ஒரு அழகிய பெண்ணிற்கும் இடையில் வரும் காதலை, அதற்குபின்னே அடுத்த சில ஆண்டுகள் அவர்களது வாழ்வில் நடந்தேறும் போராட்டங்களை, ரவிவர்மன் காமிராவின் வழியே ஏ ஆர் ரஹ்மான் துணையோடு இயக்குனர் மணிரத்தினம் சொல்லும் படம்.
இன்றைய இளசுகளின் வாழ்வில் நடந்து கொண்டிருக்கும், இன்றைய காலகட்டத்தில் தொட வேண்டிய, இருமனங்கள் இணைந்த பின்னே சுய விருப்பு வெறுப்புகளால் நடந்தேறும் கொந்தளிப்புகள் என்ற முக்கியமான மிக நுட்பமான ஒரு சங்கதியை எடுத்துக்கொண்டதற்கு பாராட்டலாம்.
‘இதோட நிறுத்திக்கோ, அப்படியே திரும்பி போயிடு, இதுக்கு மேல போனா ஆபத்துன்னு தோணுது!’ ‘ஒண்ணு ராணி மாதிரி தலையில தூக்கிக் கொண்டாடுற, இல்லன்னா நாய்க்குட்டி மாதிரி தெருவுல தூக்கிப் போட்டுர்ற!’ ‘என்கூட வேலைப்பாக்கற அவருக்கு என்ன பிடிக்கும், எனக்கு உன்னப் பிடிக்கும், உனக்கு லீலாவப் பிடிக்கும், லீலாவுக்கு ‘வீசி’யப்பிடிக்கும், வீ சிக்கு வீசிய மட்டும்தான் பிடிக்கும் !’ ‘ஹாஸ்பிட்டல்ல வேற பெட்லேருந்து இவனைத் தூக்கிட்டு வந்துட்டாங்கன்னு நெனைக்கறேன், என் அண்ணன். உத்தம புத்திரன். ஆனா கல்யாணத்திக்கு முன்னாடியே இப்படி ஒரு வேலையை செஞ்சிட்டான்!’ என சில வார்த்தைகளிலேயே வலிமை மொத்தத்தையும் இறக்கும் மணிரத்ன இயல்பு படம் நெடுக இருக்கிறது.
‘பெட்டுக்கு வேண்டாம், கண்ணாடிக்கு கூட்டிப் போ. என் முகத்தில ஏதாவது மாற்றம் தெரியுதா. தொட்டுப் பாக்கலாமா?’ என்று தொடங்கி ‘இரண்டு மாசம் நாற்பத்தியஞ்சி நாள்!’ என்று வரும் அந்த இடம், அதற்குப் பின்னே எதிரும் புதிருமாய் படுத்துக் கொண்டு உரையாடி ‘நான் டாக்டர்!’ என்று சொல்லி வெளியே போகும் வரையிலான காட்சி, கண்ணாடிக்குப் பின் பக்கத்திலிருந்து ‘ஐ லவ் யூ’ என்று தொடங்கி ‘என்ன சொன்னே!’ என்று சொல்லி தரை விரிப்பு கலையும் படி சுழன்று விழுந்து மூச்சிரைக்கக் கிடக்கும் காட்சி, மிக மகிழ்சியாகத் தொடங்கி கொஞ்ச நேரத்தில் ‘எங்கமாவ தொட்டுப் பாரு பாக்கலாம்!’ என்று கடந்து ‘ஐ செட் ஜஸ்ட் ஷட் அப்!’ என்று முடியும் அந்த மருத்துவமனைக் காட்சி என நிறைய இடங்கள் மிக அழாகாக சொல்லப் பட்டிருக்கின்றன.
கார்த்தி இந்தப் படத்திற்காக உடல் குறைப்பு, தோற்றம், மொழி என நிறைய மெனக்கெட்டிருக்கிறார். கிட்டத்தட்ட வில்லனைப் போன்ற ஒரு பாத்திரம் நிறைய உழைத்திருக்கிறார். ‘அழகியே…’ பாடலில் நன்றாகவே செய்திருக்கிறார். ஆனாலும், என்னவோ ‘மிஸ்ஸிங்’
அதிதி ராவ்… அட… யாரிந்த பெண், அழகாக இருக்கிறார், அழகாக நடிக்கிறார்! அவர் கூட வரும் பெண்ணும் நன்று.
பாகிஸ்தான் சிறையிலிருந்து மிக எளிதாக தப்புவது, ஆஃப்கானிஸ்தான் காட்சிகள், சக்ரவர்த்தி என்ற பெயர் கொண்ட தமிழ் அப்பா பாத்திரம் ஒரு சுத்த வடக்கனாக இருப்பது, கொஞ்சம் மெதுவாக செல்லும் படம் போன்ற பல ஓட்டைகள் உள்ளன.
இந்தப் படத்தின் இரண்டு அசல் நாயகர்கள் ரவிவர்மனும் ஏஆர் ரஹ்மானும்தான். இரண்டு பெரும் பின்னிப் பெடலெடுக்கிறார்கள். நீங்கள் நேராகப் போய் காஷ்மீரைப் பார்த்தாலும் இப்படிப் பார்க்க முடியாது. அவ்வளவு அழகு. ‘அழகியே’ ‘சாரட்டு வண்டியில் சீரட்டு’ என்று பாடலிலும் பின்னணி இசையிலும் பட்டையை கிளப்புகிறார் ரஹ்மான்.
மணிரத்னம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறுகிறது. அந்த எதிர்பார்ப்பை ஈடு செய்தாரா, இன்றைய ட்ரெண்டுக்கு தந்திருக்கிறாரா என்றால் இல்லை! அன்றைய காலகட்டத்தில் இருந்த அதே மணிரத்னமாகவே இருக்கிறார்.
வி டாக்கீஸ் – வெர்டிக்ட்: ‘காற்று வெளியிடை’ – காற்று வெளியேறி விட்டது. மணி இருக்கிறார். ரத்னம் இல்லை. பார்க்கலாம்.
: திரை விமர்சனம் – பரமன் பச்சைமுத்து
